Archive for the ‘Uncategorized’ Category

என்.எஸ்.கிருஷ்ணன் – சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்

மார்ச் 26, 2009

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.
சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று…? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜசாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.

 
   

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.

1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை.

பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

 
   

ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே ப‌ரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற பு‌ரிதலும் நமக்கில்லை.

பிறந்தநாள் அன்று நினைவுக்கூட்டம், ஒரு நினைவுச்சின்னம், அதிகபட்சம் தபால்தலை என நமது சடங்குகள் ஒரு வட்டத்தைவிட்டு வெளியேறியதில்லை. கலைவாணரும் இந்த வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சி‌ரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.

“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்ச‌த்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.

இந்த உதாரண குணத்தை இளைய தலைமுறை அறிய செய்திருக்கிறோமா என்றால் இல்லை. பா‌ரியையும், கோ‌ரியையும் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது நல்லதுதான். அத்துடன் திருட வந்தவனை திருடன் என்று மனைவியிடம்கூட சொல்லாமல் தன்னுடைய நாடகத்தில் வேலை பார்ப்பவன் என்று கூறி அவன் தேவைக்கு பணம் கொடுத்து உதவிய கலைவாணரையும் சொல்லிக் கொடுப்பதுதானே நியாயம்.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.‌ஜி.ஆ‌ரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவ‌ரின் கதை சிறார்களிடம் பதிய வைக்க வேண்டிய ஒன்றல்லவா.

சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் ச‌ரி, தண்டனையும் ச‌ரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயம‌ரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயம‌ரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.

இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்… நினைவுச்சின்னம், நினைவுத் தபால்தலை போன்ற மரபான சடங்குகளால் கௌரவிக்க முடியாத கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்.

நாகேஷ் – புறக்கணிப்பின் நாயகன்

மார்ச் 26, 2009

நாகேஷ் இறந்துவிட்டார். மீள கட்டியெழுப்ப முடியாத ஒரு சகாப்தம் அவருடன் முற்று‌ப் பெறுகிறது. தமிழ்‌த் திரையுலகின் வற்றாத நகைச்சுவையின் பேரூற்று அவர். மக்கள் திலகம், நடிகர் திலகம் என்ற இரு பிரமாண்டங்களை‌க் கடந்து தனது பிரகாசத்தை தக்கவைத்துக் கொண்ட மகா கலைஞன்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். அப்பா கிருஷ்ணராவ், அம்மா ருக்மணி. சமூகத்தில் பெயர் தெ‌ரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு நாகேஷ் வந்து இறங்கிய இடம், சென்னை. ரயில்வேயில் முதலில் சிறிய வேலை. நமது இடம் இதுவல்ல என்பது அவருக்கு‌த் தெ‌ரிந்தே இருந்தது.

தனக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளாத அந்த நேரத்தில் கம்ப ராமாயணம் நாடகத்தை நாகேஷ் பார்க்க நேர்கிறது. நாடகத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள அவரது மனம் விழைகிறது. முதல் வேஷம் வயிற்று வலிக்காரன். அவரது நடிப்பை மேடையில் புகழ்ந்து பேசுகிறார் நாடகத்துக்கு தலைமை வகித்த எம்.‌ஜி.ஆர். இலக்கு தெ‌ரிய வந்தபிறகு அவர் தேங்கி நின்றதேயில்லை, குடிப் பழக்கத்துக்கு ஆளாகும் வரை.
எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி இருவருடனும் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்திருக்கிறார் நாகேஷ். இது அன்று அதிசயம். இருவேறு திசைகளில் பயணித்த அவர்களின் படங்களில் நாகேஷ் தொடர்ந்து இடம்பெற்றதற்கு அவரது திறமையும், மக்களை வசீக‌ரிக்கும் தன்மையுமே காரணம். இதற்கு சிறந்த உதாரணம், பாலசந்தர்.

நடிகர்களின் ஆதிக்கம் திரையுலகில் கோலோச்சியிருந்த நேரத்தில் அதனை மறுத்து, பிரபல நடிகர்கள் இல்லாமலே திரைப்படங்களை உருவாக்கியவர் பாலசந்தர். அவ‌ரின் இந்த மறுதலிப்புக்கு ஆயுதமாக பயன்பட்டவர் நாகேஷ். நாகேஷின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.

அவருக்குப் பிறகு கமல் ஹாசனின் சில படங்கள் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்தின. அபூர்வ சகோதரர்கள், நம்மவர், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

நாகேஷின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை எளிதாக இல்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து மணந்ததால் வீட்டை பகைத்துக் கொள்ள நேர்ந்தது. மூன்று மகன்கள் இருந்தும் அவர் தனிமையில் வசிப்பதையே விரும்பினார். மூவ‌ரில் ஒருவரான ஆனந்தபாபுவின் போதைப் பழக்கம் அவரை பெருமளவு பாதித்தது. பெருளாதார நெருக்கடியால் தனது திரையரங்கை விலைபேசும் நிலைக்கு நாகேஷ் தள்ளப்பட்டார்.
சோதனைகளை எல்லாம் நடிப்பின் வாயிலாகவே அவர் கடந்திருக்கிறார். நடிப்பு அவருக்கு தொழிலாக மட்டும் இருக்கவில்லை. அது வாழ்க்கை. உடல் ஒத்துழைக்கும்வரை அவர் நடிப்பை விடவில்லை. அவரது நடிப்பில் வெளியான கடைசிப் படம் சென்ற ஆண்டு வெளியான தசாவதாரம்.

படங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை அவர் ஆயிரத்தில் ஒருவன். அடுத்தவரை புண்படுத்தாத நகைச்சுவையில் கலைவாணருக்கு அடுத்தபடி நினைவில் வருகிறவர் நாகேஷ். ஆனால், கலைவாண‌‌ரின் பிரதிபலிப்பல்ல நாகேஷ். அவரது நகைச்சுவை தனித்துவமானது. யாரையும் புண்படுத்தாதது. நகைச்சுவையின் வடிவில் போதனைகள் எதையும் அவர் செய்வதில்லை. சினிமாவில் துடுக்குத்தனமான வெள்ளந்தி இளைஞர் அவர். உடல்மொழியும், மானுட அபத்தங்களுமே அவரது நகைச்சுவையின் ஆதாரங்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவுக்கு தனது திரைப்படத்தின் கதையை விளக்கும் அந்த ஒரு காட்சியே போதும்.

நாகேஷின் நடிப்பை, அவரது நகைச்சுவையின் வீச்சை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், யாருக்காக அழுதான் படங்களில் அவர் வெளிப்படுத்திய குணச்சித்திர நடிப்பின் ப‌ரிமாணத்தை தொகுத்து அளிப்பது, தமிழர்களைப் பொறுத்தவரை வீண் வேலை. நாகேஷ் என்ற கலைஞனை யாருடைய அறிமுகமும் இல்லாமல் இருண்ட திரையரங்குகளில் கண்டு பரவசப்பட்டவர்கள் அவர்கள்.

நகைச்சுவை திலகம் என்பதைவிட புறக்கணிப்பின் நாயகன் என்ற பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும். உலகின் எந்த நகைச்சுவை நடிகருடனும் ஒப்பிடக் கூடிய தகுதியும், திறமையும் கொண்ட அவருக்கு இதுவரை ஒரு தேசிய விருதுகூட வழங்கப்பட்டதில்லை. மாநில அளவில்..? யோசித்தால் கலைமாமணி போன்ற கூட்டத்தோடு கும்மியடிக்கும் ஏதாவது விருது தேறலாம். மற்றபடி…?

இந்திய அளவில் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் பட்டியலை தயா‌ரித்தால் முதலிடத்தில் இருப்பார், நாகேஷ். அரசின் தடித்த சுயநல தோலை கடந்து அங்கீகாரத்தை கைப்பற்றும் எந்த சூட்சுமங்களும் அறியாத அப்பாவி கலைஞன் அவர். அவரைப் போன்று புறக்கணிக்கப்படும் கலைஞர்களுக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்க என்ன செய்யப் போகிறோம்? இந்த சிந்தனையே நாகேஷுக்கு நாம் செலுத்தும் நேர்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

காற்றின் மொழி……. இசை, காதலின் மொழி……. முத்தம்

ஜனவரி 18, 2009

வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல்.

ஆம்…. நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா?

முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள்.

முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டாம். உங்களுக்கான காதலை நீங்களே முதலில் வெளிப்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.

முத்தத்தில் பல வகையுண்டு. அன்னையின் முத்தம், சகோதரரின் முத்தம், குழந்தையின் முத்தம், நண்பர்களின் முத்தம், காதலர்களின் முத்தம் என இது நீண்டு கொண்டே செல்லும்.

காலையில் தரும் முத்தம் முழு நாளையுமே இனிதாக்கும். மாலையில் தரும் முத்தும் மனதை உற்சாகப்படுத்தும். இரவில் தரும் முத்தம் இதமான தூக்கத்தை தரும் என முத்தத்திற்கு இவ்வளவு தத்துவங்கள் சொல்கிறார்கள் மருத்துவர்களும்.

ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.

நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.

சரி முத்தத்தில் இவ்வளவுதானா? என்று சப்புக் கொட்டாதீர்கள். முத்தத்தினால் உடலுக்கு கிட்டும் நன்மைகளும் ஏராளம்… ஏராளம்…
முத்தத்தினால் கிட்டும் நன்மைகளைக் காணலாமா?

* முத்தம் உங்களது வாயை சுத்தம் செய்யும் கருவியாம். சிரிக்காதீர்கள். உண்மைதான். உங்களது வாயை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய விரும்பினால் அதற்கு ஒரே எளிய வழி முத்தம்.

* கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறுத்தி முத்தம் கொடுப்பதன் மூலம் கண்களுக்கும், இதயத்திற்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. டென்ஷனையும் குறைக்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக்கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.

* நீண்ட முத்தத்தினால் உங்கள் உடலில் தேவையற்ற காலரிகள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.

* பிரெஞ்ச் முத்தத்தினால் உங்கள் வாய் தசைகளுக்கும், கன்னத்திற்கும் எளிதான உடற்பயிற்சி கிட்டுகிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்தை இழக்காது.

* அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிகமான ரத்தம் உடலுக்குப் பாயும். அப்போது எல்லா நரம்புகளும் வேலை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

நீங்களும் உங்களுக்கு அன்பானவர்களுக்கு முத்தம் அளித்து அதன் மூலம் கிட்டும் பலன்களை அனுபவியுங்கள். எங்களுக்கும் தெரிவியுங்கள்.

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!

ஜனவரி 18, 2009

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து வந்த பெண்களை ஆண்டுக்கு ஆண்டு அதே குலுக்கல் முறையில் மாற்றிக் கொள்ளவும் செய்தனர். அக்கொடுமை கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் நடந்து வந்த காமக் கொடுமைக்குத் துணை நின்ற உரோமானிய அரசு, காதலுக்கும் காதல் வாழ்வுக்கும் தடை விதித்தது.
தடுக்கப்பட்ட தடைவிதிக்கப்பட்ட காதலர்க்குத் துணைபுரிந்த பிஷ்ப் வேலன்டைன், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கொலையும் செய்யப்பட்டார்.
உரோமானிய நாட்டின் காதல் கொடுமை முடிவுக்கு வந்தபின்னர், ‘காதலர்க்கு துணைபுரிந்த ‘வேலன்டைன்’ நினைவைப் போற்றும் தினமாகக் “காதலர் தினம்” கொண்டாடப்படுகிறது. இதுவே, காதலர் தினக் கொண்டாட்டத்தின் சுருக்கமான வரலாறு.

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா:
பண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா முற்றிலும் மாறுபட்டது! உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழா! அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது! காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

சோழன் செம்பியன்:
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்று புறநானூற்றுப் புலவர் (49) மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான்
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், ‘வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்
இந்திர விழா:
தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் ‘நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என’க் (3) குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.

மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனித் திங்கள் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழா‌விற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம்.

பின்பனிக் காலம்:
மகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில் அமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம் பின்பனிக் காலம். அக்காலத்தை ஆதித்த மண்டலம் மிதுன வீதியில் இயங்கும் காலமே பின்பனிக் காலம் என்று கூறினர். அத்தகைய பின்பனிக் காலமே, காதல் திருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர்.

பின்பனிக் காலச் சிறப்பு:
குணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு திரையாக அளிக்கும் பொருள்களாகிய அகில், சந்தனம், வாசனைப்பொருள், கருப்பூரம் முதலியபொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும் வில்விழாவைக் காண வந்த பின்பனிக் காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்? என்று இளங்கோ வினவுகின்றது நயமான இலக்கிய விருந்தாகும்
வில்விழா:
காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், அவ் வில்விழா என்றும் வழங்கப் பட்டுள்ளது

கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப் பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள்

சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

விழா ஏற்பாடுகள்:
காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.

காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான் என்றால், பண்டைய தமிழகம் நடத்திய காதல் திருவிழா எவ்வளவு சிறப்புக்கு உரியதாக இருந்துள்ளது என்பது விளங்கும்.

காதலர் தங்குமிடம்:
விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, “மூதூர்ப் பொழில்” என்று பெயரிடப் பட்டிருந்தது! அவ்விடத்திற்கு, “இளவந்திகை” என்னும், சிறப்புப் பெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
காமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தோட் செம்பியனுக்குத் திறை செலுத்த காமதேவனே வருகின்றான் என்று விழாவைச் சிறப்பித்துக் கூறும் புலவர், காமதேவன், வேனிலொடும் தென்றலொடும் சேர்ந்து திறை கொண்டு வந்தான் என்கிறார். காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும் பூங்கா அழகுமிக்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது! அந்த மலர்ச் சோலையில் இளவேனில் காலங்களில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய மலர்களை மலர்விக்கும் மரங்களையும் மலர்க் கொடிகளையும் பயிரிட்டிருந்தனர்.

காதற் கடவுளாகிய மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில் என்பதால், காதல் விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப் பட்டது
காமன் கோட்டம்:
மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்தன. இத்தெய்வத்திற்கு இராசகிரியத்தில் விழா நட‌‌த்தப்பட்டதை பெருங்கதை உரைக்கிறது.

காதலன் வரவுக்காகக் காத்திருந்த பதுமாபதி, உதயணனைக் கண்டு மகிழ்ந்த பின்னர் தன் காதற் தலைவனைக் கண்ட மகிழ்ச்சியில் வேதியர்க்கும் மற்றவக்கும் அவர்கள் வேண்டிய பொருளைத் தானமாக வழங்கினாள் என்பதயும் அறியலாம்
இளவேனில்:
காதல் தலைவியர், தங்கள் காதல் தலைவனைக் காதலித்து விரும்பியது போலவே இளவேனிலும் அவர்களைக் காதலால் விரும்புகின்றது!

எவ்வாறென்றால், காதலரைக் கூடிக் களித்து மகிழும் மகளிர், தங்கள் காதல் தலைவனை அணைத்த கை, நெகிழ்ந்து விடாமல் பின்னிக் கிடக்கச் செய்வதே இளவேனில் தான் என்பர். தம்மை விரும்பும் நல்லவராகிய காதல் தலைவர்க்கு தாம் நல்லவர் ஆனது போல, காதல் திருவிழாவின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் காதலர்க்கும் இளவேனில் நல்லையே என்று, கூறும் அழகே அழகு!

தமிழர் விரும்பும் விழா:
இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது
காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி, அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்ற, அறியப்படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.

பண்டைக்காலத்தில் தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான் சோழன்! அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான்! அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.
அச்செய்தியை மணிமேகலை விழாவறை காதை விளங்குகிறது. அவ்விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், “மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, ‘ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்’ உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், “இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்” என வரைவு காண்கின்றார்
காதல் தேவனை வணங்கும் பெண்கள்:
வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும்! என விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, “காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

‘காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும், காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக் காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன் அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய வேண்டும்!என்று காமனை இன்று மட்டுமல்ல என்றும் இரப்பேன்’ என்று ஒருத்தி உரைக்கக் காணலாம்
காம தேவன் விழாவில் பூம்புனல் விளையாட்டு:
காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து புனலாடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோது, வினையாற்ற வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம். தோழியிடம் தலைவி கீழ்க் கண்டவாறு உரைக்கின்றாள்.

‘ஒளிரும் இழையினை உடைய தோழி, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக்கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ?’ என்று காதலன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பது புலனாகிறது
நம் காதல் இளைஞர்கள், பூம்புனலில் நீராடும் போது இல்லக் கிழத்தியுடன் மட்டுமல்லாது காதல் கிழத்தியுடன் சேர்ந்து புனலாடிக் கொண்டிருந்தனர். காதல் திருவிழா காதலர்க்குப் பெருவிழா என்பது புலப்படும்.
கடற்கோள்:
இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது! என்னும் செய்தி காதல் கொண்ட தமிழின உள்ளங்களைக் கண்ணீரில் ஆழ்த்துகின்றது. காதல் வாழ்க! காதல் வாழ்க! என்று. உலகம் வியக்க விழாக்கோலங்கொண்டு உவகையில் மூழ்கித் திளைத்திருந்த பூம்புகார் பெருநகர் கடலுக்கு இரையாகக் காதலே காரணமாயிற்றே! எனக் கதற தோன்றுகிறது.

கரிகால் வளவனின் மகன் சோழன் நெடுமுடிக் கிள்ளி:
கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்! தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான்
தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப்பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார் 18. நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக,சோழமண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை!

பழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒருவரான பேராசிரியர் k.உலகநாதன், தமிழ் மொழியின் தொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழகம், “உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று என்று உறுதியாகக் கூறலாம்.

உரோமாபுரியினரால் தொடங்கப் பட்டு நடத்தப் படுவதாகக் கூறப்படுகின்ற ‘காதலர் தினம்’ (VALENTINES DAY) தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்! காரணம், உரோமானியர்கள், காமதேவனுக்குத் திருவிழா நடத்திய சோழர்களின் காலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப்பாளர்களாக, போர் வீரர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அஃதோடல்லாமல், உரோமானிய வணிகர்கள் தமிழகத்தின் பொருள்களை வாங்கிச் செல்ல மரக்கலங்களில் வந்து சென்றனர் என்பது, காமதேவனுக்காக எடுக்கப்படும் விழாவைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்! அதனால், அவர்களிடத்திலும் அப்பழக்கம் தோன்றியிருக்கலாம். எப்படிப்பார்த்தாலும், காதல் திருவிழா நடத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருந்திருப்பது தமிழகமே! என்றுரைப்பதற்கு, எவ்வித ஐயமுமில்லை.

4 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு

ஜனவரி 18, 2009

இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல்.

தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும்.

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்டு

ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.

4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.

மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது.

இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு

தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.

சேவாக் எனும் அற்புதன்

திசெம்பர் 19, 2008

உலக கிரிக்கெட் வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வீரர் தனிச்சிறப்பான ஆட்டத் திறனுடன் தோன்றுவர்.

நாம் அறிந்த வரையில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், ஆல்வின் காளிச்சரண், விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர், ஜி.ஆர்.விஸ்வநாத், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் தங்களது தனிப்பட்ட, வேறு எந்த வீரரும் அவர்களை நகல் செய்ய முடியாத, ஒரு திறமையை வெளிப்படுத்தி அற்புத வீரர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
ஆனால் இந்த வீரர்கள் கையாண்ட முறைகள் அனைத்தையுமே கையாண்டு எந்த ஒரு விதிகளுக்கும் அடங்காமல் படுபயங்கரமாக எதிரணியினரை கதிகலங்க அடித்து வருகிறார் சேவாக். தற்போது விரேந்திர சேவாக் ஆடி வரும் ஆட்டம் கிரிக்கெட்டின் மரபான உத்திகள் அனைத்தையும் உடைத்தெறிவதாய் அமைந்து வருகிறது.

1999ஆம் ஆண்டு சேவாக் அஜய் ஜடேஜாவின் தலைமையின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதில் அவர் அக்தர் பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அணியை விட்டு நீக்கப்பட்டு மீண்டும் கங்கூலி தலமையின் கீழ் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார்.

முதன் முதலில் அவர் ஆடிய ஆட்டம் பெங்களூரில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில். அந்த ஆட்டத்தில் சச்சின் ஏற்கனவே துவக்கத்தில் களமிறங்கி சதம் எடுத்துவிட்டுச் சென்றார். ஆனால் பின்னால் களமிறங்கிய சேவாகை அப்போது யாருக்கும் அதிகம் தெரியாது. வர்ணனையாளராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மட்டும் சேவாகை “இன்னொரு டைனமைட் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது” என்று வர்ணித்தார். சேவாகும் அதனை நிரூபிக்கும் விதமாக அன்று 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார்! அந்த ஆஸ்ட்ரேலிய அணியில் கிளென் மெக்ரா, கில்லஸ்பி போன்ற தலை சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் தன்னை சச்சின் டெண்டுல்கரின் விசிறி என்று கூறியதோடு, ஆட்டத்திலும் அவரது அதிரடி முறையையே பின்பற்றுகிறேன் என்றார். இன்று சச்சின் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள, துவக்கத்திலேயே எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்யும் சிம்ம சொப்பன துவக்க ஆட்டக்காரராக சேவாக் தொடர்ந்து நீடிக்கிறார். இனிமேலும் அப்படித்தான் ஆடப் போகிறார்.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்ட போது 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை குறைந்த ஓவர்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில், சேவாக் முதன் முதலாக ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அன்று அவர் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். அன்றுதான் இந்தியாவின் புதிய அதிரடி மன்னன் அன்று பிறந்ததாக அனைவரும் சேவாகை கொண்டாடத் துவங்கினர்.

அவரது முதல் டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்று. 2001 ஆம் ஆண்டில் இந்திய அணி நல்ல வீரர்களைப் பெற்றிருந்தும் டெஸ்ட் போட்டிகளில் அயல் நாடுகளில் திணறி வந்த காலக் கட்டம். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக புளூம்ஃபௌன்டெய்ன் மைதானத்தில் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார்.

இந்தியா 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில். தனது நாயகர் சச்சினுடன் இணைந்த சேவாக் அன்று வெளிப்படுத்திய ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணியினரை அதிசயிக்க வைத்தது.

இவரும் சச்சினும் இணைந்து சுமார் 47 ஓவர்களில் 220 ரன்களை 5வது விக்கெட்டுக்காக சேர்த்தனர். சச்சின் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்ட நிலையில், சேவாக் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி 105 ரன்களைக் குவித்தார்.

அப்போது வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எந்தவித அச்சமும் இல்லாமல், மரியாதை இல்லாமலும் என்று கூட சொல்லலாம், அடித்து நொறுக்கினார்.

இதனால் அவர் அடுத்ததாக வந்த இங்கிலாந்து தொடரில் கங்கூலியால் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். கங்கூலி எடுத்த அந்த வரலாறு காணாத முக்கியமான முடிவுதான் இன்று நாம் பார்க்கும் சேவாக்கை நமக்கு கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கியவர் அணித் தலைவர் கங்கூலி.

ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்று துவண்டிருந்த இந்திய அணியை ஒரு சதம் மற்றும் 80 ரன்களால் சேவாக் உற்சாகமூட்டினார். அதன் பிறகுதான் கங்கூலி அந்த தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தார். அந்த நாள் முதல் இந்திய கிரிக்கெட்டின் போக்கு மாறியது என்றால் அது மிகையாகாது.

அதன் பிறகு 2003 உலகக் கோப்பைக்கு முன்னால் ஒரு மோசமான நியூஸீலாந்து தொடரை இந்தியா எதிர்கொண்டது. அதில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் தோற்றது. இரண்டில் வெற்றி பெற்றது. அப்போது நியூஸீலாந்து அணி இந்தியாவிற்கு அமைத்த ஆட்டக்களம் மிகவும் கர்ண கொடூரமானது. பந்துகள் தாறுமாறாக எழும்பியதோடு சில பந்துகள் மிகவும் தாழ்வாகவும் சென்றது. அத்தகைய ஆட்டக்களத்தில் சேவாக் மட்டுமே சிறப்பாக விளையாடி அந்த தொடரில் இரண்டு சதங்களை எடுத்தார். இந்த இரண்டு சதங்களும் அவரது தைரியத்தையும், அதிரடி மனப்போக்கையும் உலக அணிகளுக்கு எடுத்துக் காட்டியது.

அதன் பிறகு உலக கோப்பை போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அதில் சேவாக் பல அதிரடி துவக்கங்களை கொடுத்து இந்திய அணி இறுதிக்குள் நுழைய முக்கியமான பங்களிப்புகளை செய்தார். பாகிஸ்தானிற்கு எதிராக அவர் சச்சினுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவை விட்டு அகலாதது. 271 ரன்கள் இலக்கை எதிர்த்து வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், ரசாக் பந்து வீச்சிற்கு எதிராக முதல் 11 ஓவர்களில் இந்தியா 110 ரன்களை எடுத்து அதிரடி துவக்கம் கண்டது. சேவாக் மீண்டும் ஒரு அபாயகரமான வீரர் என்ற தகுதியை எட்டினார்.

இறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை நாம் 300-320 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தால் சேவாக் ஆடிய ஆட்டத்திற்கு நம்மை கோப்பையை வெல்லச் செய்திருப்பார். 39 ஓவர்களில் 234 ரன்களை இந்தியா எடுத்தது. சேவாக் அதிரடி 82 ரன்களை எடுத்தார். முதன் முதலில் கிளென் மெக்ராவின் பந்தை கட் செய்து கவர் பாயிண்ட் திசையில் சிக்சருக்கு விரட்டினார் சேவாக்.

2004ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை பெற்றார். அப்போதுதான் கங்கூலி தலைமை இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது அவரும் ஆகாஷ் சோப்ராவும் கொடுத்த துவக்கம் ஆஸ்ட்ரேலிய அணியினருக்கு அதிர்ச்சியளித்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற அடிலெய்ட் டெஸ்டில் எடுத்த 72 மற்றும் 47 ரன்களுடன் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணியின் கடுமையான ஆவேசங்களுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்டில் முதல் நாள் துவக்கத்தில் களமிறங்கினார்.
அன்று அவர் எடுத்த 195 ரன்கள் கிரிக்கெட் பண்டிதர்கள் முதல் உலகின் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை வாயப்பிளக்கச் செய்தது. ஆஸ்ட்ரேலிய மண்ணில் ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஒரே நாளில் 325 ரன்களுக்கும் மேல் இந்திய அணி குவித்தது. மேற்கிந்திய அணியின் அதிரடி வீரர் ராய் ஃபிரெட்ரிக்ஸ் ஆடிய முதல் நாள் அதிரடி இன்னிங்சிற்கு பிறகு சேவாக் ஆடியதுதான் மிகச்சிறந்த முதல் நாள் அதிரடி என்று ஆஸி. ஊடகங்களும் ரிச்சி பெனோ, பில் லாரி, இயன் சாப்பல் உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்களும் புகழ்ந்து தள்ளினர்.

சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவ்ர்ட் மெகில்லிடம் அன்றைய தினம் முடிந்து நிருபர்கள் கேட்டபோது, நான் தவறாக வீசினேன், சரியாக வீசினேன் என்பதெல்லாம் அல்ல, சேவாக் என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுதான் வேடிக்கை என்றார். அன்று அவரை மட்டுமல்ல மற்ற எந்த வீச்சாளர்களையுமே அவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் மைதானம் முழுக்க சிதற அடித்தார்.

அந்த தொடரை சமன் செய்து பலத்த மரியாதையுடன் பாகிஸ்தானிற்கு வந்த கங்கூலி தலைமை இந்திய அணி மீண்டும் சேவாகின் திறமையைக் கண்டு வாயடைத்து நின்றது. முல்டான் டெஸ்ட் போட்டியில் முதல் நாளே 228 ரன்களை அராஜக, ஆக்ரோஷ அதிரடியினால் எடுத்த சேவாக், மறு நாள் சக்லைன் முஷ்டாக் பந்தை எந்த வித தயக்கமும் இல்லாமல் சிக்சருக்கு விரட்டி எடுத்து 300 ரன்களை எடுத்து முச்சதம் கண்ட முதல் இந்திய நாயகனானார். அந்த டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றது.

அந்த தொடர் முடிந்த போது அந்த 2004ஆம் ஆண்டில் சேவாக் 12 டெஸ்ட் போட்டிகளில் 1141 ரன்களை 63.38 என்ற சராசரியுடன் எடுத்து உலக வேகப்பந்து வீச்சாளர்களை கடுமையான அச்சுறுத்தல்களுக் குள்ளாக்கினார். ஆனால் அவரது ஒரு நாள் ஆட்டம் இந்த காலக்கட்டத்தில் சற்றே பின்னடவை கண்டது. அந்த ஆண்டு 27 ஒரு நாள் போட்டிகளில் அவர் வெறும் 671 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2005ஆம் ஆண்டும் சேவாக் 8 டெஸ்ட் போட்டிகளில் 785 ரன்களை 60.38 என்ற சராசரியுடன் பெற்றிருந்தார். இதில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு அபாரமான வெற்றி 154 ரன்களையும், பாகிஸ்தானிற்கு எதிராக கொல்கத்தாவில் வெற்றி 201 ரன்களையும் விளாசி அசத்தியிருந்தார்.

ஜான் ரைட் தனது 4 ஆண்டுகால சிறப்பான இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக, இந்தியா அடுத்த பயிற்சியாளருக்கு வலை வீசி வந்தது.
அப்போதுதான் கிரேக் சாப்பல் என்ற சனிப்பெயர்ச்சி இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டது. 2007 உலகக் கோப்பைக்குள் இந்திய அணியை தலைகீழாக மாற்றி விடுகிறேன் பார் என்று உலகை புரட்டிப் போடும் புதிய கிரிக்கெட் தத்துவத்துடன் கிரேக் சாப்பல் பொறுப்பில் அமர்ந்தார்.

அதன் பிறகு நடந்த குழப்பங்கள் ஏராளம். இதில் பலி கடாவானவர் இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் கங்கூலி, அதன் பிறகு சேவாக், இர்ஃபான் பத்தான், யுவ்ராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஏன் சச்சின் டெண்டுல்கரும் அவரது விஷமமான உத்திகளினால் தங்களது மனோபலத்தை இழக்க நேரிட்டது. அதன் உச்ச கட்ட விளைவு உலகக் கோப்பை 2007இல் ஏற்பட்ட இழிவான முதல் சுற்று வெளியேற்றம்.

சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில்தான் பாகிஸ்தானில் சேவாக் 254 ரன்களை அதிரடி முறையில் குவித்து திராவிடுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக இரண்டாவது மிகப்பெரிய துவக்க ரன் எண்ணிக்கையான 407 ரன்களை பெற்றார். ஆனால் இதனையும் மறந்தனர் இந்திய தேர்வுக்குழுவினர்.

ஆனால் அவர் விட்டுச் சென்ற எச்ச சொச்ச கருத்துக்கள் அவர் சென்ற பிறகும் நம்மை விட்டபாடில்லை. ஒரு நாள் போட்டிகளில் சரியாக விளையாடாத சேவாகை டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் இந்திய அணி தூக்கியது. இங்கிலாந்து தொடரில் திராவிட் தலைமையில் ஜாஃப்ஃரும், தினேஷ் கார்த்திக்கும் துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். அந்தத் தொடரில் ஜாகீர் கானின் அபாரமான பந்து வீச்சினால் நாம் தொடரை வென்றோம். அதன் பிறகு ஒரு நாள் போட்டிகளில் தோல்வி. திராவிட் விலகி தோனி இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தலைவராக அறிவிக்கப்படுகிறார்.
அவர் மீண்டும் சேவாகை அழைக்கிறார். அப்போது துவங்கிய சேவாக் தனது அதிரடி திறமைகளை நிரூபித்தாலும், ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் சேவாக் இல்லை.

அந்த நிலைமை அப்படியே தொடர. அடுத்ததாக கும்ளே தலைமை ஆஸ்ட்ரேலியப் பயணத்தின் போது டெஸ்ட் போட்டிகளில் சேவாக் ஒதுக்கப்பட்டார். ஜாஃபரையும் திராவிடையும் துவக்கத்தில் களமிறக்கி ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு பெர்த் டெஸ்டில் மீண்டும் சேவாக் உள்ளே நுழைகிறார்.

பெர்த்தில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கொடுத்த சிறப்பான துவக்கம் மட்டுமல்லாது, பந்து வீச்சிலும் கில்கிறிஸ்ட், சைமன்ட்ஸ், விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் மிகப்பெரும் பங்காற்றினார். சேவாக் உள்ளே நுழைந்தவுடன் அதுவரை திக்குமுக்காடிக் கொண்டிருந்த திராவிட் பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை எடுத்தார்.

அதன் பிறகு அடிலெய்ட் டெஸ்டில் முதல் இன்னிக்ஸில் அதிரடி 63 ரன்களை எடுத்த சேவாக் இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை தோல்வியிலில்ருந்து காத்தார். தனது அதிரடி இயல்பை கட்டுப்படுத்தி கொண்டு இரண்டு மணி நேர ஆட்டத்தில் பவுண்டரிகள் எதையும் அடிக்காமல் விக்கெட்டை பாதுகாத்தார் சேவாக்.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி இங்கு வந்தது. சென்னையில் சேவாக் அன்று ஆடிய ஆட்டத்தை உலக கிரிக்கெட்டில் வேறு எந்த முதல் தர வீரரும் ஆடியிருக்க முடியாது என்று அடித்துக் கூறலாம். உலகின் அதிவேக முச்சதத்தை விளாசினார் சேவாக். நிடினி, ஸ்டெய்ன், காலிஸ் உள்ளிட்ட அபார பந்து வீச்சாளர்களின் பந்துகள் மைதானத்தின் நாலா பக்கமும் சிதறின. 304 பந்துகளில் 42 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் சகிதம் 319 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். சுமார் 200 ரன்களை பவுண்டரிகளாகவே அடித்த ஒரு பேட்ஸ்மெனை இனிமேல் உலகம் காணாது.

அதன் பிறகு இலங்கை சென்ற இந்திய அணி அஜந்தா மென்டிஸ் என்ற புரியாத புதிர் வீச்சாளரிடமும் முரளிதரனிடமும் திக்கித் திணறியபோது இரண்டாவ்து டெஸ்டில் அவர் துவக்கத்தில் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 201 ரன்களை எடுத்தது, கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த சதங்களுல் முதனமை பெறும் என்றால் அது மிகையாகாது. இதிலும் 22 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் அடித்து மொத்தம் 231 பந்துகளையே அவர் சந்தித்தார். ஒரு முனையில் பேட்ஸ்மென்கள் திக்கி திணறியதையும் மறு முனையில் இவர் எல்லா பந்துகளயும் அடித்து நொறுக்கியதும் வியப்பை அளித்தது. ஒரே ஆட்டக் களத்தில் எப்படி இரு வேறு வகையான ஆட்டங்கள் சாத்தியம்? சாத்தியம் என்றார் சேவாக். இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடி அரை சதம் எட்டினார் சேவாக் இந்தியா அந்த டெஸ்டை வெற்றி பெற்றது.

அந்த 201, 50 ரன்களுக்குப் பிறகு சேவாக் எடுத்த ரன் விவரங்கள் இன்னிங்ஸ் வாரியாக இதோ: 21, 34, 45, 6, 35, 90, 1, 16, 66, 92, 9, 83.

ஒரு நாள் போட்டிகளில் கடைசி 10 இன்னிங்ஸ்களில் சேவாக்: 78, 119, 49, 42, 60, 85, 1, 68, 69, 91.

கடைசியாக அவர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய 83 ரன்களை பிறருடன் ஒப்பிடுவது கடினம். 387 ரன்கள் இலக்கை இந்தியா எந்த காலத்தில் துரத்தியுள்ளது? கடந்த 25 ஆண்டுகளில் இல்லை என்று கூறிவிடலாம். அவரது இடத்தில் ஜாஃபரோ, தினேஷ் கார்த்திக்கோ இருந்திருந்தால் குறைந்தது நாம் டிரா செய்திருப்போம். இவர் களமிறங்கி நடுவர் “பிளே” என்று கூறியவுடன் ஆரம்பித்த அதிரடி 83 ரன்கள் வரை ஓயவில்லை. டெஸ்ட் போட்டியில் 50 ரன்களை 5 ஆவது ஓவரில் எட்டியது இதுவே முதல் முறை என்றும் நாம் கருத இடமுண்டு.

சென்னை டெஸ்ட் போட்டியை சேவாகின் அந்த மேதைமையான துவக்கம் இல்லையெனில் நாம் வென்றிருக்க முடியாது என்று உறுதிபடக் கூறலாம். இனிமேல் இந்திய அணிக்கு சேவாக் இருக்கும் வரையில் 4வது இன்னிங்ஸில் இலக்கு நிர்ணயிக்க முயலும் கிரிக்கெட் அணிகள் சேவாக் எடுக்கப்போகும் 100 ரன்களை கணக்கில் கூடுதலாக சேர்த்து இலக்கை நிர்ணயிக்கவேண்டும். அதாவது 300 ரன்கள் இந்தியாவிற்கு போதும். ஆனால் சேவாக் இருந்தால் 400 ரன்கள் வேண்டும்… எதிரணிக்கு.

இயன் சாப்பல் ஒரு முறை, “இன்னமும் சிறிது காலத்திற்கு சேவாகும், கம்பீரும் இது போன்ற அதிரடி முறையைக் கையாண்டு உலகப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் போகிறார்கள், இது இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தரும்” என்றார்.

இது போன்று பந்து வீச்சாளரின் பெயர், அவரது சாதனை, அவர் எவ்வளவு வேகம் வீசுகிறார், சுழற்பந்து வீச்சாளாயிருந்தால் அவர் எவ்வளவு தூரம் பந்துகளை திருப்புவார் என்று கிரிக்கெட்டின் அடிப்படைகளை உடைத்தெறிந்து பந்து விழும் இடம் அடி என்று உள் மனது கூறினால் அடிப்பது இதுவே சேவாகின் எளிமையான ஆனால் பயங்கரமான உத்தி.

2008ஆம் ஆண்டில் இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ள நிலையில் அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 60.20 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இந்த ஆண்டில் 18 போட்டிகளில் 893 ரன்களை 50 ரன்களுக்கு சற்று குறைவான சாராசரியுடன் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் சிறந்த வீரர் விருதும், ஐ.சி.சி. சிறந்த பேட்ஸ்மென் விருதும் சேவாகிற்கு வழங்கப்படுவதே நியாயம். அவர் பெறப்போவதும் நிச்சயம்.

அயராது சுழன்ற கைகள் ஓய்ந்தது! ஈடுகட்ட முடியாத கும்ளே

திசெம்பர் 13, 2008
இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ளே திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது, சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், இந்திய அணிக்கு அது ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பாகும்.

18 ஆண்டுகால தனது போராட்ட கிரிக்கெட் வாழ்வில், அனில் கும்ளே தவறாக மதிப்பிடப்பட்டார். ஆனால் இதற்கும் காரணம் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் கடந்த 15-16 ஆண்டுகால வரலாற்றில் 3 தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ஒருங்கே கொண்ட மற்றொரு காலக்கட்டம் என்று இதனைக் கூறலாம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் அந்த காலத்திய விலைமதிக்கமுடியாத 4 சுழற்பந்து வீச்சாளர்களான பேடி, பிரசன்னா, சந்திர சேகர், வெங்கட் ராகவன் ஆகியோர் விளையாடிய போது இங்கிலாந்தில் டெரிக் அன்டர்வுட், மேற்கிந்திய தீவுகள் அணியில் லான்ஸ் கிப்ஸ் ஆகியோர் இருந்தது போல், இந்த 15 ஆண்டுகளில் ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், அனில் கும்ளே ஆகியோர் அந்த இடத்தை சிறப்பித்துள்ளனர்.

ஷேன் வார்னின் மாயப்பந்து வீச்சிற்கும், முரளிதரனின் புரியாத புதிருக்கும் இடையில் கும்ளேயின் புகழ் சற்று எடுபடாமல்தான் போனது. ஆனால் இதெல்லாம் ஊடகங்கள், ரசிகர்களை பொறுத்தவரையில்தான். எதிரணியினரைப் பொறுத்தவரை கும்ளே எப்போதும் ஒரு அபாயகரமான பந்து வீச்சாளர்தான். போராளிதான். எளிதில் விட்டுக் கொடுக்காத ஒரு உரம் வாய்ந்த வீரர்தான்.

   

ஷேன் வார்ன், முரளிதரன் அளவுக்கு எண்ணிக்கையில் இவர் அதிக வெற்றிகளை நமக்கு பெற்றுத்தரவில்லை என்றாலும், 1993 முதல் 2008 வரையிலான இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் வெறும் 43 டெஸ்ட் போட்டிகளில் 288 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை இந்த போட்டிகளில் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு டெஸ்டிற்கு 7 விக்கெட்டுகள் என்ற சராசரியில் அவர் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்றால் வெற்றியில் இவரது பங்களிப்பு நாம் விலைமதிக்க முடியாதது என்றுதான் கூறவேண்டும்.

கும்ளே பந்து வீசிய காலகட்டம் மிகக் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் கூட, அதற்கு முன்னர் சென்னை, கொல்கட்டா ஆகியன சுழற்பந்து வீச்சிற்கு உகந்த சிறப்பான களங்களாகத் திகழ்ந்தன. சந்திரசேகர், பிரசன்னா, பேடி ஆகியோர் எப்படிப்பட்ட அணியையும் புரட்டிப்போட்டு வறுத்தனர். ஆனால் கும்ளே, ஹர்பஜன் காலத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சுழற்பந்திற்கு உதவும் ஆட்டக்களங்கள் என்று எதுவும் இல்லை என்ற நிலையில், தங்களின் அதீத பந்து வீச்சால் எதிரணியினரை திணறடித்தனர். இதில் பெரிதும் சாதித்தால்தான் கும்ளே, வார்ன், முரளி புக‌ழ‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-வது டெஸ்டில் இவர் ஹிர்வாணி இருக்கும்போதெ தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் இந்திய அணி பெரும் மாற்றங்களை சந்தித்து வந்தது. மஞ்சரேக்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளே நுழைந்த சமயம். உலக கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி பெரிதும் பேசிக்கொண்டிருந்த காலம். கும்ளே விளையாடிய இந்த முதல் டெஸ்டில், ஓல்ட் டிராஃபோடில்தான் சச்சின் டெண்டுல்கர் அந்த புகழ் பெற்ற தனது முதல் சதத்தை (119) எடுத்து ஆட்டத்தை டிரா செய்தார்.

அந்த முதல் டெஸ்டில் கும்ளே 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியதோடு, பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர் அடுத்த போட்டிக்கு இருக்க மாட்டார் என்றும் இந்திய அணியில் இவரது காலம் நீடிக்காது என்றும் பத்திரிக்கைகள் ஊகங்களை வெளியிட்டன.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய பயணம் மேற்கொள்ளும்போதும், 1992 உலகக் கோப்பை அணியிலும் கும்ளே இடம்பெறவில்லை. உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்தியாவின் முதல் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு கும்ளே தேர்வு செய்யப்பட்டார். அங்கு இவர் 4 டெஸ்ட்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கடைசி டெஸ்டில் இவரும் ஸ்ரீநாத்தும் ஏறக்குறைய இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார்கள்.

அப்போதும் இவர் பற்றி வெளியில் ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா இவரை நாம் இப்போது அஜந்தா மென்டிஸை பார்ப்பது போல் பார்த்து அதிசயித்தது.

லெக்ஸ்பின்னர்களுக்கேயுரிய ஃபிளைட், ஆர்க், பந்தை இறக்கும் இடத்தில் மாற்றங்கள் என்று ஒரு அழகியல் இவரிடத்தில் இல்லை. காற்றில் வேகமாக வரும் ஃபீல்டிங்கை இறுக்கமாக நிறுத்தி துல்லியமான அளவு மற்றும் திசை ஆகியவற்றை கொண்டு பேட்ஸ்மென்களை ஒரு முனையில் கட்டிப்போடுவார், சற்று கவனம் சிதறினாலும் ஆட்டமிழக்கச் செய்து விடுவார். எப்போதும் எப்படி ஒரு பேட்ஸ்மென் கவனத்துடன் இருக்க முடியும். இதனால் இவரை விளையாடும் பேட்ஸ்மென்கள் பொறுமை இழப்பது அடிக்கடி நிகழும். வித்தியாசமாக ஆட நினைத்து விக்கெட்டை இழப்பார்கள்.

1993ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாக துவங்கிய கும்ளேயின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வாழ்வில் 2008ஆம் ஆண்டு மட்டுமே இவரது விக்கெட் எடுக்கும் திறன் மங்கி வந்தது. அதுவும் ஆஸ்ட்ரேலிய தொடரில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை தொடர் ஒன்று மட்டுமே இவர் விக்கெட்டுகளை அவ்வளவாக கைப்பற்றவில்லை.

மற்றபடி இந்த 15 ஆண்டுகால அயராத டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ளே 127 போட்டிகளில் 614 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இதுவரை விளையாடிய வீரர்களிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தவர் அனில் கும்ளே என்றால் அது மிகையான கூற்றேயல்ல.

நாம் அணி வாரியாக எடுத்துக் கொண்டாலும் கும்ளேயின் சாதனை வேறு எந்த (கபில்தேவ் நீங்கலாக) இந்திய பந்து வீச்சாளரும் இவர் அளவுக்கு சாதனைகளை நிகழ்த்தியது இல்லை என்று கூறலாம்.

இவரது காலத்தில்தான் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் பலவீனமாகி, ஆஸ்ட்ரேலியாவின் வெற்றி ஆதிக்கம் தொடங்கியது. 20 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்து விளையாடிய கும்ளே 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 30.32; அதிகபட்சமாக ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராகத்தான் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 10 முறை கைப்பற்றியுள்ளார்.

ஓரளவிற்கு பலமான இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 டெஸ்ட் போட்டிகளில் 92 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் 84 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 15 டெஸ்ட்களில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டிகளில் நாம் அதிகம் வேற்றி பெற்றிருக்கிறோம். இலங்கைக்கு எதிராக 18 டெஸ்ட்களில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்று இலங்கை அணிக்கு எதிராக அங்கு சென்று விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள், இலங்கையில் அசாருதீன் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றதில் அனில் கும்ளேயின் பங்களிப்பை மறத்துவிட முடியாது.

சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஆஸ்ட்ரேலியாவிற்கு 1998ஆம் ஆண்டு சென்ற போது கும்ளே பந்து வீச்சை கிழிகிழி என்று கிழித்தார்கள். ஆனால் அதன் பிறகான தொடர்களில் அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை அங்கு சென்று வீழ்த்தியுள்ளார். இதில் நாம் இரண்டு டெஸ்ட்களை ஆஸ்ட்ரேலியாவில் வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பதையும் நாம் எளிதில் மறந்து விட முடியாது.

கும்ளேயை மட்டம் தட்டுபவர்கள் அவருக்கு எல்லா மைதானங்களிலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது என்று கூறுவார்கள், ஷேன் வார்ன் போல் பந்தை திருப்புவதில்லை என்று கூறுவார்கள். இதற்கும் நாம் புள்ளி விவரங்களுடன் பதில் அளிக்க முடியும்.

ஆசிய மைதானங்களில், அதாவது புழுதிக் கள சுழற்பந்து மன்னன் என்று ஒரு சில “அதிகம் தெரிந்தவர்கள்” வர்ணிக்கும் மைதானங்களில் 82 டெஸ்ட் போட்டிகளில் 419 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் கும்ளே. ஒரு டெஸ்டிற்குக் 5 விக்கெட்டுகள் என்ற சராசரியில்! புழுதியே அல்லாத பளிங்குக் கல் அயல்நாட்டு மைதானங்களில் விளையாடிய மீதி 40 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே ஒரு டெஸ்டிற்கு 5 விக்கெட்டுகள் என்ற சராசரியில்.

எங்கே கும்ளே சோடை போனார்? என்று அவரை விமர்சித்தவர்கள் கூறட்டும். இன்சமாம் ஒரு முறை குறிப்பிட்டது போல் எந்த களமாயிருந்தாலும், 5-ம் நாள் ஆட்டத்தில் கும்ளேயின் பந்து வீச்சை திறைமையுடன் ஆடும் வீரர்தான் சிறந்த பேட்ஸ்மென் என்றார். விளையாடுபவர்களுக்குத்தான் கும்ளேயின் பந்து வீச்சு என்னவென்று தெரியும். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் பெரிதாக விமர்சனம் வைக்க இயலாது.

ஒரு டெஸ்ட் வீரர் என்றால் அவர் வெறும் விக்கெட்டுகள் வீழ்த்துவது, ரன்கள் எடுப்பது மட்டுமல்ல. ஓய்வறையிலும், களத்தில் விளையாடும்போதும் தனது அயராத போராட்டக் குணத்தால் மற்றவர்களை உற்சாகமூட்டி போராட வைக்க வேன்டும். அந்த விதத்தில் அனில் கும்ளேயின் பங்கை ஒருவரும் குறைவாக மதிப்பிட முடியாது.

   

தலையில் கட்டுடன் மேற்கிந்திய தீவுகளில் தைரியமாக பந்து வீசி பிரைன் லாராவை வீழ்த்தியது அவரது இந்த மன உறுதிக்கும், அயராத போராட்ட குணத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டு.

கும்ளே விளையாடிய கடைசி டெஸ்டிலும் அவர் தன் போராட்ட குணத்தை இளம் வீச்சாளரான அமித் மிஷ்ராவிற்கு விளக்கினார்.

மிட்செல் ஜான்சனுக்கு ஒரு கேட்சை சரியாக கவனிக்காமல் அமித் மிஷ்ரா கோட்டை விட்டார். ஆனால் அடுத்த கும்ளேயின் ஓவரில் கையில் காயத்துடன் இருந்த கும்ளே தானே ஓடிச்சென்று கேட்ச் பிடித்து விட்டு பந்தை ரன்னர் முனை ஸ்டம்ப்பை நோக்கி எறிந்து ஸ்டம்புகளை சாய்த்தார். இது அமித் மிஷ்ராவிற்கான ஒரு செய்தி.

ஆட்டத்தின் எந்த நிலையிலும் நாம் 100 சதவீதம் அர்ப்பணித்தால்தான் வெற்றி பெறுவது சாத்தியம் என்ற அந்த செய்தியை அவர் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாளிலும் அமித் மிஷ்ரா போன்ற இளம் வீரர்களுக்கு கற்பிக்க முடிகிறது என்றால் அதுதான் கும்ளேயிடம் நாம் காணும் சிறப்புக் குணம்.

இதுபோன்ற இன்னொரு பந்து வீச்சாளரை… அல்ல… ஒரு அணிக்கான சிறந்த வீரரை, சிறந்த ஆட்டவுணர்வு உள்ள ஒரு வீரரை, கிரிக்கெட் உலகம் கண்டுபிடிக்குமா என்பது சந்தேகமே.

 

‌திரை‌யுலக மேதை ச‌த்ய‌ஜி‌த் ரே!

செப்ரெம்பர் 16, 2008

வங்காள மொழி திரைப்பட இயக்குனரும், திரையுலக மேதை என்று அறியப்பட்டவருமான சத்யஜித் ரே.

1992 ஆம் ஆண்டு அவரது உயிர் பிரிந்தது. பதேர் பாஞ்சாலி, சாருலதா, அபுர் சன்சார், அபராஜிதோ உள்ளிட்ட மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கிய இவர் உலக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தவர் என்றால் மிகையாகாது.

வங்காள மொழியில் இயக்கியிருந்தாலும், அவரது திரைப்படத்தில் வரும் மனிதர்கள் தூலமானவர்கள். இந்தியா முழுவதையும் பிரதிபலிக்கும் மனோ நிலையை அவரது கதாபாத்திரங்கள் பிரதிபலித்துள்ளன.

அவர் மறைந்து 16 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், கலை சார்ந்த, அடிப்படையான மனித இயல்புகள் சார்ந்த விஷயங்களை திரைச் சலனங்களில் படம்பிடித்துக் காட்டுவதில் தரமான இயக்குனர்களுக்கு இன்றும் அவர் வழிகாட்டியாகவே இருந்து வருகிறார்.

சாருலதா என்ற திரைப்படத்தில், பெண்ணின் தனிமையை எடுத்துரைக்கும் ஒரு அபாரமான காட்சியில், பைனாகுலர் மூலம் அந்த பெண் மாடியிலிருந்து அனைத்தையும் பார்ப்பார், அப்போது அவரது கணவர் வருவார் கணவரையும் அந்த பைனாகுலர் வழியாகவே பார்ப்பார்.

எந்த ஒரு ஆவேச வசனமும் இல்லாத இந்த அற்புதமான காட்சி பெண் சமுதாயத்தின் நிலையை, தனிமையை அப்படியே தத்ரூபமாக காட்டியது. இந்த படம் வெளிவந்த போது விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்: ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா என்றார். அதற்கு சத்யஜித் ரே பதில் கூறுகையில், ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? என்றார்.

கறுப்பு வெள்ளை காலக் கட்டத்திலேயே கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கமின்மையை பைனாகுலர் காட்சி மூலம் சூட்சமமாக வெளிப்படுத்தியவர் இவ்வாறுதான் பதிலளிப்பார்.

கிராமிய வாழ்வின் சோகம் கலந்த ஒரு இனிமை இவரது படங்களில் வெளிப்பட்டுள்ளன. தூரத்து இடிமுழக்கம் (இது தமிழில் வந்த தூரத்து இடி முழக்கம் அல்ல) என்ற படத்தில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தியாவை தாக்கும் அச்சுறுத்தல் இருந்தபோது ஒரு கிராமம் எவ்வாறு தனது பிழைப்பிற்கு கஷ்டப்பட்டது என்றும் அப்போது வறுமையிலும் அந்த மனிதர்கள் எவ்வாறு செம்மையாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.

எந்த துன்பமான காலக் கட்டத்திலும் மனித உறவுகள் கைகோர்த்தால் துன்பத்தை வெல்லலாம் என்று இந்த படத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார் ரே.

“இவரது படங்களை காணத் தவறியவர்கள், சூரியனையும், சந்திரனையும் காணாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவே பொருள்” என்று ஜப்பானிய இயக்குனர் மேதை அகிரா குரொசாவா கூறியது நினைவு கூறத்தக்கது.

மர்லின் மன்றோ

செப்ரெம்பர் 16, 2008

1950 ஆம் ஆண்டு மர்லின் மன்றோ நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படத்தின் கால் மணி நேர காட்சியொன்று 1.5 மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. FBI-ன் பராமரிப்பில் இருந்த அந்த கால் மணி நேர படத்தை, அதிக விலைகொடுத்து வாங்கிய செல்வந்தர் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை. விற்பனை ரகசியமாக நடந்தது.

மர்லின் மன்றோ இறந்து நாற்பத்தைந்து வருடங்கள் கழித்து நடந்திருக்கும் இந்த நிகழ்ச்சி, மர்லின் உயிரோடு இருந்தபோது உலகம் அவரை எவ்வாறு உருவகித்துக் கொண்டது என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது.

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. ஒன்றரை மில்லியன் டாலருக்கு கால் மணி நேர படமே இதற்கு சான்று.

மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.

மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம்.

மர்லினின் பிறப்புச் சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சனின் பெயரும், ஞானஸ்தான சடங்கில் அப்பா இடத்தில் ஜாஸ்பர் பேக்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மர்லினின் தாயார் கிளாடிஸ் ஹாலிவுட்டிலுள்ள ஆர்.கே.ஓ. ஸ்டுடியோவல் பணிபுரிந்தபோது, அங்கு ·பிலிம் கட்டராக இருந்த ஸ்டாண்லி கிப்போர்டுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். அதனால் மர்லினின் தந்தை யார் என்ற கேள்விக்கு மூன்றாவது சாய்ஸாக ஸ்டாண்லி கிப்போர்டின் பெயரும் முன்மொழியப்படுகிறது. தவிர வேறு பலரோடும் தொடர்பு இருந்ததால் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கிளாடிஸாலேயே சொல்ல முடியவில்லை.

அப்பா என்ற உறவு வாழ்க்கையில் ஏற்படுத்திய வெற்றிடம் மர்லினு‌க்கு இறுதிவரை ஒரு அலைக்கழிப்பாக தொடர்ந்தது. அறுபது வயதான ஆர்தர் மில்லரோடு மர்லின் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவரை டாடி என்றே அழைத்து வந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.
ஒரே வருடத்தில், அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்பட அழகியாக உயர்ந்தார் மர்லின் மன்றோ. இந்தப் புகழ், வெளிச்சம் மர்லினின் கணவனுக்குப் பிடிக்கவில்லை. கணவனா, வேலையா என்ற கேள்வி வந்தபோது, கணவனை உதறினார் மர்லின். 1942ல் நடந்த 1944ல் கசந்த நினைவுகளுடன் முறிந்துபோனது.

பேஸ்பால் விளையாட்டு வீரர் Joe Di Maggio உடனான இரண்டாவது திருமணமும், ஆர்தர் மில்லர் போன்ற அரை டஜன் நபர்களுடனான மர்லினின் உறவும் மன நிறைவானதாக அமையவில்லை. இந்த காலகட்டத்தில் மதுவும், நோயும் மர்லினை கூறுபோட தொடங்கியிருந்தன. மனநல மருத்துவரின் ஆலோசனைகளையும் மர்லின் கேட்டு வந்தார்.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியுடனான மர்லினின் அறிமுகம், அமெரிக்கா முழுவதுமே பதட்டத்தை உருவாக்கியது. ஜான் கென்னடியுடன் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடியுடனும் மர்லின் தொடர்பு வைத்திருந்தார். ஜாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது, அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி. ஜான் கென்னட மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்பது போன்ற ஹாஸ்யங்கள் கிளம்பின. அமெரிக்க உளவு நிறுவனங்களின், ‘நீக்கப்பட வேண்டியவர்கள்’ பட்டியலில் அவர் பெயரும் இணைக்கப்பட்டது.

இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது அறையில் இறந்து கிடந்தார் மர்லின். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இளமையை ஒரு அனாதையைப் போல் காக்க நேர்ந்த மர்லினின் உடல் சவக்கிடங்கில் அதே அனாதைதனத்துடன் கிடந்தது. அவள் உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ, காதலனோ, உறவினர்களோ யாருமில்லை. இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தாள்.

அழகின், இளமையின், காமத்தின் குறியீடாக மர்லின் இன்று வரை முன்னிறுத்தப்படுகிறாள். மிதமிஞ்சிய காமத்தை வெளிப்படுத்தும் வேடத்தை ஏற்று நடித்த மர்லின் ஒருபோதும் காமத்தை நாடிச் சென்றதில்லை. மாறாக காமுகர்களால் குதறப்பட்ட வாழ்க்கையாக அவளது வாழ்க்கை திகழ்ந்தது. தனது எட்டு வயதில் வயதான ஒருவரால் பாலியல் சித்திரைவதைக்குள்ளானதை வளர்ந்த பிறகும் வடுவான மனதில் தங்கியிருந்ததை நினைவுகூர்ந்துள்ளார் மர்லின். வளர்ப்பு பெற்றோர்களே பல நேரம் அவளை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.

திரைப்படத்தில் பிரபலமான பிறகு மர்லின் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள், அப்பா என்ற உறவின் தேடுதலாகவே அமைந்தது. ஆர்தர் மில்லரை மட்டுமின்றி தனது கணவன் Joe Di Maggio-வையும் மர்லின் டாடி என்றே அழைத்தார்.

மர்லின் சிறந்த பாடகி. லேடீஸ் ஆ·ப் தி கோரஸ் படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். இது தவிர அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களை, அவர்களின் படைப்புகளை மர்லின் அறிந்திருந்தார். இந்த பன்முகத்தன்மையை அழித்து, கவர்ச்சி எனும் ஒற்றை பிம்பமாக இந்த சமூகம் அவரை பிரகடனப்படுத்தியது. சுருக்கமாக, மர்லின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட ஓர் அழகிய கனவு!

புரூஸ் லீ

செப்ரெம்பர் 16, 2008

You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

எண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.

சென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.

ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.

ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் – தற்காப்புக் கலையில் கைதேர்ந்த – அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.

ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.

போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.
வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை.

அவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.

பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.

இந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.

இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.

தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

தனது 32வது வயதில் 1973ஆம் ஆண்டில் இறந்த புரூஸ் லீ நடித்த வே ஆஃத டிராகன், பிக் பாஸ், பிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கேம் ஆஃப் டெத் ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்.

குங் ஃபூ கலையில் தேர்ந்தவராக இருந்த புரூஸ் லீ, ஜீத் குனி டோ என்ற தற்காப்புக் கலையை வடிவமைத்து அதனை கற்றுக்கொடுத்து வந்தார். இக்கலையை அவரிடம் பயின்ற பலர் தற்காப்புப் கலைகளில் சிறந்த விளங்கியவர்களான பாப் வால், ஜிம் கெல்லி, சக் நாரிஸ் ஆகியோர்.

எண்டர் த டிராகன் திரைப்பட வருகைக்கு பின்னர்தான் இந்தியாவில் கராத்தே கலையும் பலமாக வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.