பாராலிம்பிக் போட்டி: சீனா “ரெடி”

 

ஒலிம்பிக்

 

போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய சீனா, அடுத்து ஊனமுற்றோர்க்கான பாராலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதனை தொடர்ந்து ஊனமுற்றவர்கள் மற்றும் மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்கும் 13வது பாராலிம்பிக் போட்டி பீஜிங்கில் நடக்க உள்ளது. வரும் 6ம் தேதி துவங்கும் போட்டிகள் 17ம் தேதி நிறைவு பெறுகிறது. இம்முறை 148 நாடுகளை சேர்ந்த 4, 200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் 20 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று அசத்த காத்திருக்கின்றனர்.

முதலிடம் நோக்கி: கடந்த முறை ஏதென்சில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் சீனா 63 தங்கப்பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தற்போது சொந்த மண்ணில் போட்டிகள் நடப்பதால் மீண்டும் சாதிக்கலாம். பிரிட்டன், கனடா, தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களும் கடும் சவால் கொடுக்கலாம். இது குறித்து பிரிட்டன் குழுவின் தலைவர் பில் லேய்ன் கூறுகையில், “”சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சீனா முதலிடம் பெற்றது. இதே போல் பாராலிம்பிக் போட்டியிலும் முத்திரை பதிக்க வாய்ப்பு உண்டு. அதிக எண்ணிக்கையில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதால், பதக்கப்பட்டியலில் சீனாவை முந்துவது மிகவும் கடினம்,” என்றார்.

வருகிறார் ஆஸ்கார்: ஊனமுற்றோர் பிரிவில்மின்னல் வேக வீரராகஜொலிக்கும் தென் ஆப்ரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 11 மாத குழந்தையாக இருக்கும் போது பிறவியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இரண்டு கால்களையும் இழந்தார். மனம் தளராத இவர்கார்பன் பைபரில்செய்யப்பட்ட செயற்கை கால் பொருத்தி 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டத்தில் பங்கேற்று வருகிறார். மற்ற வீரர்களுக்கு இணையாக பீஜிங் ஒலிம் பிக்கில் கலந்து கொள்ள விரும்பினார். ஆனாலும் 400மீ., தூரத்தை 46.25 வினாடிகளில் கடந்த இவர் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இந்த சோகத்துக்கு பாராலிம்பிக்கில் பரிகாரம் தேட காத்திருக்கிறார்.

நீச்சலில் டாய்ட்: நீச்சலில் தென் ஆப்ரிக்காவின் நதாலியா டு டாய்ட் சாதிக்க வாய்ப்பு உண்டு. தனது 14 வயதில் கார் விபத்தில் இடது காலை இழந்த இவர் மற்றவர்களுடன் நீச்சல் போட்டியில் பங்கேற்க விரும்பினார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஊனமுற்ற வீராங்கனை என்ற பெருமையை பீஜிங் போட்டியில் பெற்றார். ஆனாலும் 10 ஆயிரம் மீ., பிரிவில் 16வது இடமே பெற முடிந்தது. தற்போது 24 வயதான இவர் பாராலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்த காத்திருக்கிறார். கடந்த முறை ஏதென்ஸ் போட்டியில் இவர் 5 தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.

தொடரும் சர்ச்சை: ஒலிம்பிக் போட்டிகளின் போது திபெத்தியர்களின் போராட்டம், மனித உரிமை மீறல் புகார், சுற்றுப்புறச்சூழல் மாசு போன்ற பிரச்னைகளை சீனா சந்தித்தது. இதை மீறி போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. இம்முறை பாராலிம்பிக் போட்டிக்கு முன்பாகவும் சர்ச்சைகள் காணப்படுகின்றன. சீனாவில் உள்ள 8 கோடியே 30 லட்சம் ஊனமுற்றவர்கள் மோசமாக நடத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனை மறுக்கும் சீனா, பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்துள்ளது. சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட பகுதிகளை ஊனமுற்றவர்கள்வீல்சேரில்சென்று பார்ப்பதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக பாராலிம்பிக்கை நடத்த உள்ளது. இதன் மூலம், ஊனமுற்றவர்களுக்கு உரிய மதிப்பு அளிப்பதாக உலகிற்கு உணர்த்த சீனா காத்திருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக